அகரம்: விஞ்ஞான விளக்கம் - O LEVEL

விஞ்ஞான விளக்கம் - O LEVEL

விஞ்ஞான விளக்கம்

  1. நன்னீரை விட கடல் நீர் ஏன் நீச்சலுக்கு இலகுவானது ?
  2. வட்டமாக மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் தலைசுற்றி மயக்கம் ஏற்படுவது ஏன்?
  3. பீங்கான் அல்லது கண்ணாடி கப்பில் சூடான பானங்களை விடும்போது கப் உடைந்துபோவதுண்டு ஏன்?
  4. ஒரு பெரிய ஐஸ் கட்டியைக் காற்றில் திறந்து வைத்தால் அதிலிருந்து வெண்ணிறமான புகை (FUMES) கிளம்புகிறது ஏன்?

1) நன்னீரை விட கடல் நீர் ஏன் நீச்சலுக்கு இலகுவானது ?

நன்னீர் நிறைந்த ஆறு, குளம், நீச்சல் தடாகம் போன்றவற்றில் நீந்திப் பழுகுவதைப் பார்க்கிலும் கடலில் நீச்சல் பழகுவது இலகுவான தென்பது அனைவருக்கும் தெரியும்.
நீரின் அடர்த்தி வேறுபாடே இதற்குக் காரணம். நன்னீரை விட கடல் நீரின் அடர்த்தி அதிகமானது. உப்புச் செறிவே இதற்குக் காரணம்.
அடர்த்தி கூடிய பொருள் கீழே அமிழும். அடர்த்தி குறைந்த பொருள் மேல் நோக்கிச் செல்லும். கல்துண்டு நீரில் அமிழ்வதற்கும் பிளாஸ்டிக் துண்டு நீரில் மிதப்பதற்கும் இதுவே காரணம்.
நன்னீரை விட கடல் நீரின் அடர்த்தி கூடுதலாக இருப்பதால் நாம் நீந்தும் போது மிதப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சி இலகுவாகிறது. கடல் நீரில் நீச்சல் பழகுவது இலகுவாக இருப்பதற்கான தத்துவம் இது தான்.

2)வட்டமாக மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் தலைசுற்றி மயக்கம் ஏற்படுவது ஏன்?


வட்டமாக மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் பொதுவாகத் தலைசுற்றி மயக்கம் ஏற்படுவதற்குக் காரணம் சமச்சீரைக் கட்டுப்படுத்தும் காதின் உட்பகுதியிலுள்ள உணர்ச்சி நீர்மம் உடல் சுற்றுவது நின்ற பிறகும் தொடர்ந்து சுற்றிக்கொண்டுள்ளது.
ஆகையால் சுற்றுப்புறப் பொருள்கள் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதாக அல்லது ஓடிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றன. ஆயினும் சில விநாடிகளுக்குள் அந்த நீர்மம் நெகிழ்பொருள் சமன் அடைந்து சரியாகிவிடுகிறது. இது உணர்ச்சி கிறுகிறுப்பு எனவும் அழைக்கப்படும்.
உயரத்திலிருந்து கொண்டு கீழே பார்ப்பவருக்கும் கப்பலில் போகின்ற போது பார்ப்பவருக்கும் இக்கிறுகிறுப்பு ஏற்படக்கூடும். உட்காதின் நெகிழ் நீர்மத்தின் காரணத்தால் ஏற்பட்ட நரம்பின் விளைவே இது அல்லாமல் பெரும்பாலும் உடல் சார்ந்த தன்மை இதில் இல்லை எனக் கூறலாம். உடலின் எட்டாவது கபால நரம்பின் ஒரு கிளையான வெஸ்டிபுல நரம்பின் பாதிப்பிலும் தலைசுற்றல் ஏற்படும்.

3)பீங்கான் அல்லது கண்ணாடி கப்பில் சூடான பானங்களை விடும்போது கப் உடைந்துபோவதுண்டு ஏன்?

வெப்பத்தால் பொருட்கள் விரிவடையும். கன்ணாடி கப்பில் சூடான பானங்களை ஊற்றும்போது , கப்பின் உட்பகுதி முதலில் வெப்பத்தால் விரிவடைகிறது. வெப்பம் சிறிது சிறிதாகப் பரவி சற்று தாமதமாகவே வெளிப்பகுதி விரிவடையும். சூடு அதிகம் இருந்தால் உட்பரப்பு முதலில் விரிவடைந்து , வெளிப்பரப்பு விரிவடைய தாமதமாகும்போது கப் உடைந்து விடுகிறது.

4) ஒரு பெரிய ஐஸ் கட்டியைக் காற்றில் திறந்து வைத்தால் அதிலிருந்து வெண்ணிறமான புகை (FUMES) கிளம்புகிறது ஏன்?

ஐஸ் கட்டியிலிருந்து எந்த வாயுவும் வெளியேறுவதில்லை. ஐஸ் கட்டியை திறந்து வைக்கும்போது ஐஸ்ஸைச் சுற்றியுள்ள காற்று குளிர்வடைகிறது. ஒரு அளவிற்கு மேல் குளிர்வடையும்போது அந்தக் காற்றிலுள்ள ஈரப்பதம் (MOISTURE) மிக நுண்ணிய நீர்த்திவலைகளாக மாறுகிறது. அறையிலுள்ள காற்று மேலும் கீழுமாக நகரும்போது (CONVECTION CURRENTS), இந்த நீர்த்திவலைகளும் நகருவதால் புகை போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

கல்வியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment