அகரம்: கணக்கீடும் அதன் சூழலும் அறிமுகம்

கணக்கீடும் அதன் சூழலும் அறிமுகம்

கணக்கீடு என்பதை “ஒரு தகவல் முறைமை” எனக்கூறலாம். ஏனெனில் அதனைப் பயன்படுத்தி “வணிக அலகில்” அக்கறையுள்ள கட்சியினர் தமக்கேற்ற பொருளாதார தீர்மானங்களை மேற்கொள்கின்றனர். கணக்கீட்டில் “வணிக அலகு” எனக்குறிப்பிடப்படுகின்ற விடயம் இலாபநோக்குடன் செயற்படும் வியாபார நிறுவனங்களை மட்டும் குறிப்பிடப்படவில்லை.
அது இலாபநோக்குள்ள மற்றும் இலாபநோக்கற்ற நிறுவனங்களை மட்டுமன்றி பரந்தகருத்தில் பிரயோகிக்கப்படுகிறது. தனிவியாபாரம், பங்குடைமை வணிகம், வரையறுக்கப்பட்ட கம்பனிகள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், உள்ளுராட்சி அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள், போன்ற எந்தவொரு பொருளாதார அலகும் ஒரு கணக்கீட்டு அலகாக இருக்கமுடியும். அவை யாவற்றுக்கும் கணக்கீட்டுத் தகவல்கள் தேவைப்படுகின்றன. ஏனெனில் எந்தவொரு பொருளாதார அலகும் தன்மீது அக்கறையுள்ள கட்சியினர்களுக்கு அதன் செயற்பாடுகள், முன்னேற்றம், நிதிநிலைமை பற்றிய தகவல்களை வழங்க வேண்டியுள்ளது. இத்தகைய தகவல் வழங்கும் செயற்பாட்டிற்காக கணக்கீட்டினை ஒரு கருவியாக அவை பயன்படுத்துகின்றன.

வணிக அலகு
கணக்கீட்டில், வணிக அலகு என்பது அதன் உரிமையாளரிலிருந்து வேறான தனிப்பட்ட அலகாக கருதுதல் வேண்டும். இதனை அலகுசார் கணக்கீட்டு எண்ணக்கரு (தொழில் முழுமைக்கூறு எண்ணக்கரு) வலிறுத்துகின்றது. வரையறுக்கப்பட்ட கம்பனிகள் ‘சட்டஆளுமை’ உடையன எனவே அவற்றை அதன் உரிமையாளராகிய பங்குதாரரிலிருந்து வேறான தனிப்பட்ட ஒரு அலகாக சட்டம் கருதுகின்றது. ஆனால் தனிவியாபாரமோ, பங்குடமை நிறுவனங்களோ சட்டப்படி ஒரு தனிஅலகாகக் கருதப்படுவதில்லை. இருந்தபோதிலும் கணக்கீட்டில் அவைகூட உரிமையாளரிலிருந்து வேறுபட்ட தனியான அலகுகளாகக் கருதப்படல் வேண்டுமென்பதே இதன் பொருளாகும். இந்த எண்ணக்கருவின்படி உரிமையாளரின் சொந்தச் சொத்துக்கள் வணிக நிறுவனத்தின் சொத்துக்கள் என வேறுபடுத்திப் பார்க்கமுடியும். “வணிக அலகு” என்ற சொல்லை வைத்துக்கொண்டு அது உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்யும் நிறுவனங்களைக் குறிக்கிறது என்று கருதவேண்டியதில்லை. கணக்கீட்டில் உரிமையாளரில் இருந்து வேறுபடுத்தக்கூடிய எந்தப் பொருளாதார அலகும் வணிகஅலகாகும். அவற்றுக்கென கணக்கேடுகளையும் கணக்குகளையும் பராமரிப்பது நடைமுறைச் சாத்தியமான விடயமாகும்.
தகவல்களின் தேவை
அறிவை மேம்படுத்தல், தீர்மானமெடுத்தல் என்பவற்றுக்கு பயனுடைய எந்தவொரு விடயமும் தகவல் எனப்படும். பொதுவாக தரவுகளை நிரற்படுத்தி தகவல்கள் பெறப்படுகின்றன. கணக்கீட்டுச் செயல்முறை மூலம் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து பெற்றுக்கொள்ளும் பெறுபேறு கணக்கீட்டுத் தகவல் எனப்படும். இந்த வகையில் நிறுவனமொன்றில் நாளாந்தம் இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்களை கணக்குப் புத்தகங்களில் பதிவுசெய்து, வகைப்படுத்தி, பொழிப்பாக்கி, பகுப்பாய்வுசெய்து, அதுபற்றிய வியாக்கியானங்களுடன் தொடர்பாடக்கூடிய முறையில் பெற்றுக்கொள்ளும் பெறுபேறு கணக்கீட்டுத் தகவலாகின்றது. இவ்வாறு பெற்றுக்கொள்ளும் கணக்கீட்டுத் தகவல்கள் குறித்த வணிக அலகின் மீது அக்கறையுள்ள கட்சியினர்களுக்கு தமக்கேற்ற பொருளாதார தீர்மானங்களை மேற்கொள்ள உதவுகின்றன. முகாமையாளர்கள் தமது முகாமையின் செயற்றிறனை மதிப்பிட்டு முகாமைத் தீர்மானங்களை மேற்கொள்வதும், உரிமையாளர்கள் தமது முதலீட்டிற்கான பிரதிபலன் பற்றி அறிந்து முதலீடு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதும் இந்த அடிப்படையிலேயே நிகழ்கின்றன.

தகவல் முறையாகக் கணக்கீடு
தகவல்களை அளவுரீதியான தகவல்கள், அளவுரீதியற்ற தகவல்கள் என பாகுபடுத்த முடியும். குறித்த வணிக அலகு தொடர்பாக கணியங்களுடன் வெளியிடக்கூடிய தகவல்கள் அளவுரீதியான தகவல்கள் எனவும், எண்ணிக்கையில் காட்டமுடியாத விபரிக்கமட்டுமே முடியுமான தகவல்கள் அளவுரீதியற்ற தகவல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. அளவுரீதியான தகவல்களை நிதிசார் தகவல்கள், நிதிசாராத் தகவல்கள் என வகைப்படுத்தமுடியும். பண அலகினால் விபரிக்கக்கூடிய தகவல்கள் நிதிசார் தகவல்களாகும். பணஅலகுகொண்டு விபரிக்கமுடியாதவை நிதிசாராத் தகவல்களாகின்றன. அனைத்து நிதிசார் தகவல்களும் கணக்கீட்டுத் தகவல்கள் ஆகமாட்டாது. நிதிசார் தரவுகள் கணக்கீட்டுச் செயன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு தகவல்களாக பெறப்படும்போது அவை கணக்கீட்டுத் தகவலாகின்றன.
கணக்கீட்டுத் தகவல்களின் தன்மை, அத்தகவல்கள் யாருக்குத் தேவை என்பனவற்றைப் பொறுத்து கணக்கீடானது நிதிக் கணக்கீடு, கிரயக் கணக்கீடு மற்றும் முகாமைக் கணக்கீடு என மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றது. நிதிக்கணக்கீடு வரலாற்றுத் தகவல்களை வழங்குவதோடு, அத்தகவல்கள் வணிக அலகொன்றின் தகவல்களின்;மீது அக்கறையுள்ள உள்வாரிக் கட்சியினருக்கும் வெளிவாரிக் கட்சியினருக்கும் வழங்கப்படுகின்றது. ஆனால் கிரயக் கணக்கீடும் முகாமைக் கணக்கீடும் வரலாற்றுத் தகவல்களுடன் எதிர்காலத்திற்கான மதிப்பீட்டுத் தகவல்களையும் வழங்குகின்றன. அத்துடன் அவை உள்வாரிக் கட்சியினருக்கு மட்டுமே தகவல் வழங்குகின்றன. நிதிக் கணக்கீட்டுத் தகவல்கள் மாற்றமடையாத நிலையான தகவல்களாக காணப்படுவதோடு, பொது நோக்கத்தைக் கொண்டதாக பெரும்பாலும் ஒரு வருடத்திற்குரியதாக தயாரிக்கப்படுகின்றன. ஆனால் கிரயக் கணக்கீட்டு, முகாமைக் கணக்கீட்டுத் தகவல்கள் மாற்றமடையக்கூடிய தகவல்களாக இருப்பதோடு, ஒவ்வொரு உற்பத்திப் பொருளுக்கும், திணைக்களத்திற்குமென விசேட நோக்கம் கொண்டவையாகவும், தேவைக்கேற்ப விரும்பிய காலத்திற்குரியதாகவும் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறாக கணக்கீடு, ஒரு தகவல் தொகுதியாக செயற்பட்டு தீர்மானம் மேற்கொள்ள உதவுவதை அவதானிக்கலாம்.

கணக்கீடு என்பதற்கான வரைவிலக்கணங்கள்
ஐக்கிய அமெரிக்கக் கணக்கீட்டுச் சங்கம் வழங்கியுள்ள வரைவிலக்கணப்படி “பல்வேறு பொருளியல்சார்ந்த தகவல்களை, பயன்படுத்துபவர்கள் பொருளாதாரத் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஏற்றவிதத்தில் அவற்றை இனங்கண்டு, அளவிட்டு தொடர்பாடும் கருமம் கணக்கீடாகும்”.
ஐக்கிய அமெரிக்கப் பொதுத்தராதரம் பெற்ற கணக்காளர் நிறுவனம் வழங்கியுள்ள வரைவிலக்கணப்படி “ஆகக்குறைந்தது பகுதியளவுக்கேனும் நிதித்தன்மை வாய்ந்த கொடுக்கல் வாங்கல்களினதும், நிகழ்வுகளினதும் பணப்பெறுமானங்களை இனங்கண்டு அவற்றைப் பதிவுசெய்தல், வகைப்படுத்தல், பொழிப்பாக்குதல், பகுத்தாராய்தல், ஆகிய செயற்பாட்டுத் தொடர்கள்முலம் கிடைக்கக்கூடிய நிதிப் பெறுபேறுகளை வியாக்கியானம் செய்யும் கலை கணக்கீடாகும்”.
இவ்வாறு “கணக்கீடு ஒரு தொடர்பாடல்முறை” என்றவகையில் செயற்படுவதால் அது ஒரு வணிகங்களின் மொழி என பரவலாக அழைக்கப்படுகின்றது.
கணக்கீட்டுச் சூழல்காரணி
கணக்கீட்டுச் செயற்பாட்டில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் கணக்கீட்டுச் சூழல் எனப்படும். அவையாவன
சட்டச் சூழல்
தொழில்சார் மற்றும் நிபுணத்துவச் சூழல்
தொழில்நுட்பச் சூழல்
அரசியல் பொருளாதாரச் சூழல்
சமூக, கலாச்சாரச் சூழல்
சட்டச்சூழல்
கணக்கீடு பற்றிய சட்டங்கள் சார்ந்த சகல விடயங்களும் சட்டச்சூழலில் உள்ளடக்கப்படுகின்றன. கம்பனிச் சட்டம், வரிச்சட்டங்கள், பங்குடைமைச் சட்டம் என்பன கணக்குவைத்தல், அவற்றைத் தொடர்பாடுதலில் நேரடிச் செல்வாக்குச் செலுத்துகின்றன. விசேடமாக 1995ஆம் ஆண்டு 15ஆம் இலக்க இலங்கைக் கணக்கீட்டு கணக்காய்வு நியமச் சட்டத்தின்படி கணக்கீட்டு நியமத்திற்கு அமைவாக தகவல்களை வழங்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புக்களும் கணக்கீட்டுச் செயற்பாட்டில் செல்வாக்குச் செலுத்துகின்ற சட்டச்சூழலாகின்றது. பங்குடமை தொடர்பான கணக்குகளில் “காணர் எதிர் மறே தீர்ப்பு”, என்பதை இதற்கு உதாரணமாக கொள்ளலாம்.
தொழில்சார் மற்றும் நிபுணத்துவச் சூழல்
கணக்கீட்டுச் செயற்பாட்டில் வளங்களை அளவுரீதியாகவும் நிதிவடிவிலும் அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற பல்வேறு முறைகள் இச்சூழலுக்குள் உள்ளடக்கப்படுகின்றன. பெறுமானத் தேய்வுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற “நேர்கோட்டுமுறை”, “ஒடுங்;குமீதிமுறை” என்பனவும் இருப்புக் கணிப்பீட்டுக்காகவும், வழங்கு பொருள் விலையிடலுக்காகவும் பயன்படுத்தப்படுகின்ற “முதல் உள் முதல் வெளி முறை”, “இறுதி உள் முதல் வெளிமுறை”;, என்பனவும் களஞ்சியங்களில் உள்ள இருப்புக்களின் பௌதீக அளவுகளைக் அளவிட பயன்படுத்தப்படும் நவீன விஞ்ஞான முறைகள் யாவும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். கணக்கீட்டுச் செயற்பாட்டின்போது பல்வேறு தொழில்சார் கணக்காளர் நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற சிபார்சுகளும் இச்சூழலாகக் கொள்ளப்படும் இதன்படி இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவனத்தினால் வெளியிடப்படும் கணக்கீட்டு நியமங்கள் அவற்றுக்கான திருத்தங்கள் என்பனவும் இச்சூழல் காரணியாக கொள்ளப்படலாம்.
தொழில்நுட்பச் சூழல்
கணக்கீட்டுக்காக பயன்படுத்தப்படுகின்ற கருவிகள், மனித உழைப்பு என்பன இச்சூழலாக கொள்ளப்படுகின்றன. கணனித் தொழில்நுட்பம், ஏனைய கணிப்பொறிகள் அவற்றில் அறிமுகப்படுத்தப்படும் மாற்றங்கள் என்பவற்றை இச்சூழலாக கொள்ளலாம். இந்த அடிப்படையில் மரபு முறையாக கணக்குப் பதிவுக்காகப் பயன்படுத்தப்பட்ட முறைகள், நவீன முறைகள் என இச்சூழல் நோக்கப்படலாம்.
அரசியல் பொருளாதாரச் சூழல்
நாட்டின் பொருளாதார அமைப்பில் ஏற்படும் மாற்றம், பொருளாதாரக் கொள்கையில் ஏற்படும் மாற்றம், அரசமைப்பில் ஏற்படும் மாற்றம் என்பன இச்சூழலாக கொள்ளப்படுகின்றன. தனியார்துறை, பொதுத்துறை கட்டமைப்புக்களின் மாற்றம். திறந்த பொருளாதாரக் கொள்கை. தாராள பொருளாதாரக் கொள்கை போன்ற விடயங்கள் இச்சூழலுக்கான மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகளுக்கு உதாரணங்களாக கூறக்கூடியன.
சமூக கலாச்சாரச்சூழல்
சனத்தொகையிலும் சனத்தொகைக் கட்டமைப்பிலும் ஏற்படும் மாற்றம். பொதுமக்களின் மனப்பாங்குகளில் வாழ்க்கைப் போக்கில் ஏற்படும் மாற்றம் என்பவற்றை இச்சூழலாக கொள்ளலாம்.

கணக்கீட்டின் நோக்கங்கள்
கணக்கீட்டின் பிரதான நோக்கம் வணிக அலகொன்றில் அக்கறையுள்ள உள்வாரி வெளிவாரிக் கட்சியினர்களுக்கு பொருளாதார தீர்மானங்களை மேற்கொள்வதற்கான தகவல்களை வழங்குதல் என்று கூறப்பட்டாலும், அது பின்வரும் நோக்கங்களையும் நிறைவேற்றுவதற்காக தகவலளிக்கின்றது.
பொருளாதார வளங்களைச் சிறப்பாக கையாளவும், கட்டுப்படுத்தவும்
வளப்பயன்பாடு பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ள
வணிக அலகின் செயற்பாட்டுப் பெறுபேறுகளை மதிப்பிட
சட்டத் தேவைகளைப் பூர்த்திசெய்ய
சமூக நிகழ்வாக கணக்கீட்டின் முக்கியத்துவம்
கணக்கீடு வழங்கும் தகவல்கள்மூலம் முதலீட்டாளர்களுக்கு ஏற்படக்கூடிய முதலீட்டுக்கான நிச்சயமற்ற தன்மைகளை வெகுவாக குறைத்துக் கொள்ளமுடிகிறது. அதேவேளை வணிக நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் அந்த நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுத் திருப்திப்படும்போது தமது முதலீடுகளை அந்த நிறுவனங்களில் மேலும் மேலும் முதலீடு செய்யத் து}ண்டப்படுகின்றனர். அதனால் குறித்த வணிக நிறுவனங்களுக்கு தேவைப்படக்கூடிய மேலதிக மூலதனம் கிடைத்து, புதிய புதிய கைத்தொழில்கள் உருவாகி வேலைவாய்ப்பும் தேசிய உற்பத்தியும் அதிகரிப்பதனு}டாக சமூகப் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுவதற்கு கணக்கீட்டுத் தகவல்கள் வழிகோலுகின்றன. இந்தவகையில் கணக்கீடானது முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் ஒரு சமூக நிகழ்வாக முக்கியத்துவம் பெறுகிறது.

கணக்கீட்டுத் தகவல்களைப் பயன்படுத்துவோர்
கணக்கீட்டுத் தகவல்களைப் பயன்படுத்துவோரை உள்வாரி வெளிவாரிக் கட்சியினர் என இருவகையாக பாகுபடுத்தலாம்.
உள்வாரிக் கட்சியினர்
முகாமை
வெளிவாரிக் கட்சியினர்

உரிமையாளரும் எதிர்கால முதலீட்டாளரும்
கடன்கொடுத்தோர்
தொழிற்சங்கங்கள்
அரச நிறுவனங்கள்
போட்டி வணிகங்கள்
உயர்தொழில் வல்லுனர்கள்
ஆய்வாளர்கள்
ஊடகவியலாளர்
வாடிக்கையாளர்
பொதுமக்கள்
கணக்கீடு, உள்வாரிக் கட்சியினருக்கு விரிவான தகவல்களைத் தருகின்ற அதேவேளை வெளியாட்களுக்கு சட்டத்தினால் கூறப்பட்ட ஆகக்குறைந்த தகவல்களையே தரும். இந்தவகையில் விரிவான தகவல்களைப் பெறுகின்ற வல்லமையும், உரிமையும் முகாமைக்கு மட்டுமே உண்டு என்பதால் முகாமை மட்டுமே உள்வாரிக் கட்சியினராகப் பாகுபடுத்தப்படல் வேண்டும்.
கணக்கீட்டுத் தகவல்களைப் பயன்படுத்துவோரின் தகவல் தேவைகள்
முகாமைக்கு
நாளாந்த நிர்வாக நடவடிக்கை பற்றித் தீர்மானம் எடுப்பதற்கும்
எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடவும்
புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை வகுப்பதற்கும்
வெற்றியையும், செயல் திறனையும் மதிப்பிடுவதற்கும்
நிர்வாக விடயங்களுக்குப் பயன்படுத்தவும் தேவைப்படுகின்றது.
உரிமையாளருக்கும் எதிர்கால முதலீட்டாளருக்கும்
ஈடுபடுத்திய வளங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா?
இலாபத் தன்மை எவ்வளவு?
நிறுவனத்தின் பொறுப்புக்களைத் தீர்க்கக்கூடிய சக்தி எத்தகையது?
மூலதனம் பாதுகாக்கப்பட்டுள்ளதா?
என்பன போன்ற விடயங்களை அறிவதற்குமான தகவல்கள் தேவைப்படுகின்றன.
கடன்கொடுத்தோருக்கு

தங்களால் வழங்கப்பட்ட கடனுக்குப் பாதுகாப்பு உண்டா?
தமக்கு வரவேண்டிய கடன்வட்டிக்கான நிச்சயத் தன்மை உண்டா?
மீண்டும்கடன்வழங்குதல் பொருத்தமானதா?
என்பன போன்ற விடயங்களை தீர்மானிப்பதற்கு தகவல்கள் தேவைப்படுகிறன.
தொழிற்சங்கங்களுக்கு

ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுக்கான பாதுகாப்பு
ஊழியர்களுக்கான ஏனைய சலுகைகள்
ஊழியர்களின் தொழிலின் நிரந்தரத்தன்மை
என்பவற்றை உறுதி செய்வதற்கான தகவல்கள் தேவைப்படுகின்றன.
அரச நிறுவனங்களுக்கு

வரி எவ்வளவு விதிப்பது?
வளங்கள் விரயமாக்கப்பட்டுள்ளனவா?
உரிய சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளனவா? என்பவற்றை அறிவதற்கும்
தேசிய கணக்குகளைத் தயாரிப்பதற்கும்
பொருளியல் கொள்கைகளை வகுப்பதற்கும்
அவசியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள.

போட்டி வணிகங்களுக்கு

சந்தையில் நிறுவனத்தின் பங்களிப்பை அறியவும்
நிறுவனம் கையாளும் உத்திகளையும், கொள்கைகளையும் தெரிந்து கொள்ளவும்
சந்தையில் பொதுவான ஒரு நடைமுறையை கடைப்பிடிக்கவும்
வேண்டிய தகவல்களை பெற்றுக்கொள்ள.
உயர்தொழில் வல்லுனர்களுக்கு

கணக்காய்வாளர் கணக்காய்வை மேற்கொள்வதற்கும்
நீதிபதிகள் நியாயம் வழங்கத் தேவைப்படும் ஆதாரங்களுக்காகவும்
பெறுமதி மதிப்பீட்டாளர் ஆதனங்களுக்கு மதிப்பீடு செய்யவும்.
ஆய்வாளர்களுக்கு

நிறுவனங்களின் பிரச்சினைகளை இனங்காணவும்
நிறுவனங்களை மதிப்பீடு செய்யவும்
நிறுவனத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் ஆலோசனைகளை வழங்கவும்
ஊடகவியலாளர்களுக்கு

நிறுவனத் தகவல்கள்மூலம் செய்திகளை வெளியிடவும்
நிறுவனத்திற்கான விளம்பரங்களுக்கு ஆதாரங்களை முன்வைப்பதற்கும்
வாடிக்கையாளர்களுக்கு

தாம் பொருட்கள் அல்லது சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் நிறுவனத்தின் செழிப்பான அல்லது மந்தமான போக்குகளை அறிந்து அதற்கேற்ப தமது எதிர்கால செயற்பாடுகளைத் தீர்மானிக்க
பொதுமக்களுக்கு

நிறுவனம் பற்றிய பொதுவான கருத்துருவாக்கத்திற்கு
நிறுவனத்தின் தேசிய பங்களிப்பு பற்றி அறிவதற்கு
தகவல்கள் உள்ளடங்கிய பிரதானமான நிதிக்கூற்றுக்கள்
ஒரு வணிக அலகின் குறித்தகால செயற்பாடுகள் பற்றிய கணக்கீட்டுப் பொறிமுறையின் வெளியீடாக நிதிக்கூற்றுக்கள் விளங்குகின்றன. வணிக அலகில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும் நிதிக்கூற்றுக்களிலிருந்தே தகவல்களைப் பெறுகின்றனர். “தொழில் முயற்சியொன்றின் ஏற்றுக் கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிதியியல் நிலைமையின் ஒரு கட்டமைக்கப்பட்ட நிதியியல் தெரிவிப்புரை நிதிக்கூற்றுக்களாகும்”. பொதுவாக நிதிக்கூற்றுக்கள் ஆண்டுதோறும் தயாரித்து வெளியிடப்பட்டாலும் பங்குச் சந்தையின் தேவைகளுக்காக வரையறுக்கப்பட்ட கம்பனிகள் காலாண்டுகளுக்கு ஒருமுறை அவற்றை தயாரிக்கவும் செய்கின்றன.
நிதிக்கூற்றுக்களின் கூறுகள்
வருமானக்கூற்று
ஐந்தொகை
காசுப்பாய்ச்சல்கூற்று
உரிமையாண்மை மாற்றம் பற்றிய கூற்று
குறிப்புக்களும் கணக்கீட்டுக் கொள்கைகளும்
தகவல் வழங்குதலும் அது தொடர்பான பொறுப்புக்களும்
கணக்கீட்டுத் தகவல்கள், உரிய காலத்தில் அத்தகவல்களை வழங்குவதற்குப் பொறுப்பானவர்களால் வழங்கப்படவேண்டும். கணக்கீட்டுச் செயன்முறையில் கொடுக்கல்வாங்கல்கள் எனப்படும் தரவுகளை, தொடர்பாடக்கூடிய நிதியறிக்கைகள் என அழைக்கப்படும் தகவல்களாக மாற்றியமைக்கின்ற கணக்கீட்டுக் கருமங்களில், கணக்குப்பதிவாளர் தொடக்கம் பிரதம கணக்காளர் வரையில் ஈடுபடலாம். இதைவிட பெரும்பாலான நிறுவனக் கணக்குகள் கணக்காய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்பே தகவல் தேவைப்படும் அக்கறையுள்ள கட்சியினர்களுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. எது எவ்வாறிருந்தபோதிலும் இவர்கள் யாவரும் கணக்கீட்டுப் பொறிமுறைச் செயற்பாட்டில் ஈடுபடும் பணியாளர்களே. கணக்கீட்டுத் தகவல்களை வழங்கும் இறுதிப் பொறுப்பு வணிக அலகின் உரிமையாளரையே சார்ந்தது.
இந்த வகையிலேயே கம்பனிகளின் பிரசுரக் கணக்குகளில் அவை தயாரிக்கப்பட்டதற்கும் வெளியீடு செய்வதற்கும் பொறுப்பேற்று இயக்குனர்கள் ஒப்பமிடுகின்றனர். 2007ம் ஆண்டின் 7ஆம் இலக்க கம்பனிகள் சட்டப்படி வரையறுக்கப்பட்ட கம்பனிகள் தமது நிதியறிக்ககைளை வெளியிடுதல் சட்டரீதியான ஒரு தேவையாக காணப்படுகிறது.
அதேபோல் 1995ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க இலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமச் சட்டத்தின்படி கணக்கீட்டு நியமத்திற்கு அமைவாக தகவல்களை வழங்கவேண்டிய தேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்தோடு இச்சட்டத்தில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ள வணிகநிறுவன வகைகள் கணக்கீட்டு நியமங்களைப் பின்பற்றாவிடின் தண்டனைக்குரிய குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் வழங்குவதன் இறுதிப் பொறுப்பு உள்ளவர்களாக தனி வியாபாரமெனின் அதன் உரிமையாளரும், பங்குடைமையாயின் பங்காளர்களும், வரையறுக்கப்பட்ட கம்பனியாயின் அதன் பணிப்பாளர்களுமே காணப்படுகின்றனர். எவ்வாறிருந்தபோதிலும் தகவல்களைத் தயாரித்து வழங்குவது கணக்காளர் உட்பட்ட அத்துறையில் கருமமாற்றும் பணிக்குழுவாகும். இவர்கள் நிறுவனத்தின் ஊழியர்களாவர் இவர்கள் தகவல்களை தயாரிப்பவர்களே தவிர தகவல்களை வெளியீடு செய்வதற்கான அதிகாரம் இவர்களுக்கு இல்லை. கணக்கீட்டுத் தகவல் தயாரிப்புத் துறையில் கிரயக் கணக்கீடு, முகாமைக் கணக்கீடு, நிதிக் கணக்கீடு, உள்ளகக் கணக்குப் பரிசோதனை ஆகிய நிபுணத்துவத் துறைகளைச் சார்ந்தோர் பங்குபற்றுவர்.

கணக்கீட்டுத் தகவல்களின் பண்புகள்
கணக்கீட்டுத்தகவல்கள் உண்மையானதாகவும் நியாயமானதாகவும் இருக்கவேண்டும். அத்துடன் தகவல்களைப் பயன்படுத்துவோருக்காக அவை கொண்டிருக்கவேண்டிய முதனிலைப் பண்புகளாக கூறப்படுபவை
புரிந்துகொள்ளக்கூடியதன்மை
பொருத்தமான தன்மை
நம்பகத்தன்மை
ஒப்பிடக்கூடிய தன்மை
உறுதியான தன்மை / மாறாத்தன்மை
பொருத்தமான தன்மையின் துணைப்பண்புகள்
எதிர்வுகூறல் பெறுமதி
மீள்ஊட்டல் பெறுமானம்
காலத்திற்குரிய பெறுமதி
நம்பகத் தன்மையின் துணைப்பண்புகள்
சரிபார்க்கக்கூடிய தன்மை
நடுநிலையான தன்மை
ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை

கல்வியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment